பஞ்சு, நுால் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகள், கட்டுப்படுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கொங்கு மண்டல எம்.பி.,க்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் 09.05.2022 அன்று நடந்தது.
எம்.பி.,க்கள் சுப்பிராயன், கணேசமூர்த்தி, நடராஜன், சண்முகசுந்தரம், ஜோதிமணி மற்றும் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் பங்கேற்றனர்.
இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் மற்றும் கரூர், ஈரோடு உள்பட பல்வேறு பகுதி ஜவுளித்துறையினர், பஞ்சு, நுால் விலையை கட்டுப்படுத்தவேண்டியதன் அவசியம் குறித்து பேசினர்.
மேலும் கூட்டத்தில் ஏற்கனவே 16ந்தேதி முதல் 21ந்தேதி வரை 6 நாட்கள் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் சார்பில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் அதனை மாநிலம் தழுவிய போராட்டமாக கொண்டு செல்ல இருப்பதால் 16 , 17ந்தேதி ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது எனவும், திருப்பூர் மாவட்டத்தில் 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களிலும் 2 நாள் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு திரட்ட இருப்பதாகவும் தொழில் துறையினர் தெரிவித்தனர்.