பருத்தி பஞ்சு விலையேற்றம் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் தொடங்கி 1½ ஆண்டுகளாக நூல் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் அனைத்து நூல் விலையும் கிலோவுக்கு ரூ.40 உயர்த்தப்படுவதாக 2-5-2022 அன்று அறிவிக்கப்பட்டது. அதாவது கடந்த மாதம் (ஏப்ரல் 2022) கிலோ ரூ.440-க்கு விற்பனை செய்யப்பட்ட நூல் இந்த மாதம் (மே 2022) ரூ.480-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது போல் ரகம் வாரியாக நூல்களின் விலை கிலோவுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. இதனால் பின்னலாடை துறையினர் மேலும் அதிர்ச்சியிலும் கவலையிலும் உள்ளனர்.
நூல் விலை கிலோவிற்கு மேலும் 40 ரூபாய் உயர்ந்த காரணத்தால், நூல் விலை உயர்வைக் கண்டித்து 2-5-2022 மாலை காயத்திரி ஓட்டல் வளாகத்தில் நடைபெற்ற அவசர ஆலோசனைக்கூட்டத்தில் அனைத்து தொழில் அமைப்பினரும் கலந்து கொண்டு பேசினர். அதில் மேமாதம் 16ம் தேதியில் இருந்து 21ம் தேதி வரை உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை திருப்பூரில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சங்கங்களும் கலந்துகொண்ட இந்த அவசரக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. பருத்தி பஞ்சு ம்ற்றும் நூல் ஆகியவற்றை அத்தியாவசிய பட்டியலுக்கு உடனடியாக மாற்றி மத்திய அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
2. பஞ்சு, நூல் போன்ற முக்கிய மூலப் பொருட்களை உள்நாட்டு தேவை போக, மீதியைத்தான் ஏற்றுமதி செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. இந்த பிரச்சினையை தீர்க்க, இங்கே இருக்கிற கொந்தளிப்பான சூழலை மனதில் கொண்டு எதிவரும் மே 16, 2022 முதல் மே 21, 2022 வரை அனைத்து தொழில் நிறுவனங்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள் என ஒட்டுமொத்த திருப்பூர் மட்டுமல்லாது இந்த ஜவுளி தொழில் செய்கின்ற கரூர், கோயம்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் உள்ளிட்ட எல்லாப் பகுதி மக்களையும் ஒருங்கிணைத்து 6 நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்தம் செய்வதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
4. தமிழகத்தில் உள்ள பிற மாவட்ட ஜவுளி அமைப்புக்களையும் தொடர்பு கொண்டு இதனை ஒரு மாநிலம் தழுவிய போராட்டமாக முன்னெடுத்துச் செல்வதென்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
5. மேற்கண்ட அனைத்துப் போராட்டங்களும் நிரந்த தீர்வு எட்டும் வரை சைமா(SIMA - Southern India Mills’ Association) , நிட்மா (Knit Cloth Manufacturers Association), டீமா (TEAMA - Tirupur Exporters And Manufacturers Association), டெக்மா (Tirupur Export Knitwear Mfrs. Assn), சிம்கா (South India Hosiery Mfrs. Assn.), டாட் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட அனைத்து சங்கங்களையும் அரவணைத்து செல்வதென்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.